Showing posts with label சசியின் மருத்துவ உணவு. Show all posts
Showing posts with label சசியின் மருத்துவ உணவு. Show all posts

Friday, 17 April 2020

பிள்ளைபேறு பெற்றதும் வைக்கும் மருந்து (செலவு )குழம்பு

தாய் வீட்டிலும் செய்வாய்கள். சம்பிரதாயம் பொறுத்து.. ஆனாலும் முக்கியமான உணவு பிரசவத்திற்குபின், கணவர் வீட்டிலிருந்து, அரிசி,  ஒரு கூடை நிறைய மருந்து செலவுப் பொருட்கள், பூண்டு, கத்தரிக்காய், அரைஞாண் கயிறு திரிக்க எருக்கம் நார், வேப்பம் வளையல் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து, தாய்க்கும் சேய்க்கும் குளியல் செய்த பின், கொண்டு வந்த பொருட்களை வைத்து, சாதம், குழம்பு செய்து உறவினர்கள், தெருவில் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்த காலம் ஒரு காலம்.

ஏதோ ஒரு வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும் அளவிற்கு அந்த குழம்பின் வாசம் நான்கு தெருவிற்கு மணக்கும்.
எனக்கு மகள் பிறந்த போது நான் என்பாட்டிவீட்டில் இருந்தேன்.   இந்த குழம்பு என் பாட்டி வீட்டில் வந்து அம்மா வைத்து தருவார்கள். ஆனா அந்த குழம்பு எனக்கு கிடைப்பதே மிக கடினம் வீட்டீல் மூன்று மாமா மாமி அவர்குழந்தைகள் பத்துபேர் எல்லாருக்கும் சென்று பிறகே வரும்..
 அதனாலேயே அப்பா எனக்கு தலைக்கு ஊற்றியதும் மருந்து பொடி வெல்லம் சேர்த்து இடித்து உருண்டையாக தந்துவிடுவார். 
இந்த மருந்து சாப்பிட்டால் பிள்ளை பிறந்த வயிறு சதை சுறுங்கும். இடுப்பு எலும்பு வலு பெறும்.  என்பார்கள் பாட்டி.. 

அதன் பிறகு, அந்த பழக்கம் மறைந்து, தாய் வீட்டிலேயே, சிறிதளவு அந்தக் குழம்பை தயார் செய்து, பிரசவித்த பெண்ணுக்கு மட்டும் கொடுத்தார்கள். 

இப்போது, என்  மகள் பிரசவித்த போது  அக்குழம்பு வைத்து தந்தால்  சாப்பிட பிடிக்கவில்லை.. அவளுக்கு தெரிந்த மாதிரி இருந்தாலும், அவள் வீட்டில் செய்வதில்லை.

மஞ்சள், சுக்கு,  அரிசி, வால் மிளகு, வெள்ளை மிளகு, அரிசி திப்பிலி, கொடி திப்பிலி, அதிமதுரம், ஓமம், ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், பரங்கி சக்கை, சித்தரத்தை, நிலாவரை....என்று பட்டியல் நீளும். 

பிரசவத்திற்குபின், கர்பப்பை யிலுள்ள அங்கங்கே தங்கி இருக்கும் நச்சுக்கள், வாயு வெளியேறவும், உடல் சோர்வும் வலியும் நீங்கவும், குழந்தைகளுக்குத் தேவையான பால் சுரப்பு ஏற்படுவதற்கும், தாய்க்கும் சேய்க்கும் சளி, காய்ச்சல், இருமல், தொற்று போன்றவை வராமல் இருப்பதற்கும் இந்தக் குழம்பு உதவி செய்கிறது.

பிரசவித்த பெண்கள் என்று மட்டும் இல்லாமல், அனைத்துப் பெண்களும்...ஏன் ஆண்களும் உண்ணலாம். ஆனால், மாதவிடாய் காலத்திலும், கர்ப்பிணிக ளும், எதிர்பார்த்து இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு பால் கிடைக்க வில்லை என்று பிரசவித்த பெண்கள் கூறுவதற்கும், மாதவிடாய் போக்கு முறையாக இல்லை என்று கூறுவதற்கும்,  இருவருக்கும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் வருவதற்கும், இந்த பொருட்களை மறந்ததும் மிகப் பெரிய காரணம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

எனக்கு மிகவும் பிடித்த குழம்பு. உறவினர்கள் யார் வீட்டில் இந்தப் பொடி அரைத்தாலும் எனக்கு வந்துவிடும். நினைக்கும் போது நானே அரைத்து குழம்பு வைத்து அனைவருக்கும் கொடுப்பேன்.

குழந்தைக்கு நன்றாக தாய் பால் கிடைக்க பூண்டு நிறைய சேர்த்து குழம்பு வைக்கவும் . இரவில் பாலில் வேக வைத்த பூண்டும் சாப்பிடலாம்.