Tuesday, 14 April 2020

சமயோசிதம் தேவை...

சமயோசிதம் தேவை...

ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.

அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.

ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது. பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.

பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா !

பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.

பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.

சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.

பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப்பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும், ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.
ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.

ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பினாள்.

அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப்படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.

சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.

திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.

பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் "திருடனுக்குத் தேள் கொட்டியது போல" ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.
சசிகலா தனசேகரன்.

உறவுகள் என்பார்வையில் "அக்கா தம்பி"

#tccontest2020
நானும் தம்பியும் 
கவிதை தலைப்பு 
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

"நீயின்றி நான் வளர்ந்தேனோ நிலவுக்கு பின் விடியலாக
நம் உறவு" ..

நம் கூட பிறந்த உறவுகள் 
என்றுமே இறைவன் நமக்கு துணையாக அனுப்பியிருக்கும் வரமே தவிர பாரங்கள் அல்ல.
அதற்கான சான்றாக 
நானும் என்  தம்பியும்..

நீ மண்ணில் வந்து 
விழுந்த போதே நான் கன்னிதாயாகிப் போனேன்.
என்பதை உணரவில்லை.
ஆனாலும்.. 

பிறந்த குழந்தையை 
கையில் வாங்க அடம் 
பிடித்து வாங்கிய நான் ..

குண்டு கண்கள் நீண்ட 
விரல்கள் செக்க 
செவேரென நிறம் சுருள்
சுருளாக நீண்ட கருகருவென
 முடிகள் என்னைப்போலவே 
என்று செவிலியர் 
சொன்னதும் ..
புல்லரித்து போனேன்..

 அம்மாவிற்கு உதவியாக 
பல வேலைகள் செய்த 
போது உணர்ந்தேன்..
நானும் ஒரு கன்னிதாய்ப் 
போலவே!!

உன் அசைவும் அழுகையும் உறக்கத்தில் புன்முறுவலும் 
என்னில் எண்ணிலடங்கா
ஏகாந்தம் பிறக்கும்.

மெல்ல மெல்ல நாளொரு பொழுதுமாய் வளர
துவங்கினாய்.. விரல் பிடித்து 
மடி தவழ்ந்து வளர்ந்தது 
நம் சகோதர பாசமும்..

ஏட்டில் அடங்கிடுமோ
இக்கவிதை வானத்து நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டே வளர்பிறையாக வளரத்துவங்கியது
நம் பாசமும்..

உன்னை தூக்க 
முடியாமல் தூக்கி 
கீழ போட்டதும் 
அம்மாவிடம் திட்டு 
வாங்கியதும் உரம் 
விழுந்து அம்புஜம் 
பாட்டி நெல்லெண்ணைய் 
தடவி உரம் எடுத்து 
மசூதிக்கு சென்று
இனி உரம் விழாம
இருக்க கயிறு போட்ட 
பிறகு நானே தூளியில் 
ஆட்டி உறங்க வைத்ததும் 
அந்த களிப்பிலே நானும் உறங்கிடுவேன்..

நடைவண்டி பயிற்சி 
தரும் ஆசானாக 
கை பிடித்து 
கற்பலகையில் அனா 
ஆவன்னா பழகியது 
நானாகவே
கற்று தருவேன். என் வீட்டு பாடங்களையும் கணக்கு
பெருக்கல் வாய்பாடும் 
உன்னிடமே ஒப்பித்து
 காட்டுவேன்.. 

நான் வளர எனக்கு 
தாத்தா பாட்டியோ மாமன் அத்தையோ ஏன் அப்பா 
அம்மாகூட ஒரு மரபாச்சி பொம்மையும் வாங்கி 
தந்ததல்ல. 

நானும் கருத்தறிந்து 
கேட்டதல்ல..
நீயே எனக்கு 
பொம்மையாகி 
போனாய் பல 
நேரத்தில் மாலை 
நேரவிளையாட்டு 
தருணங்களில் ..

நாட்கள் கடந்து 
வருடங்களாகி பின் 
நீயும் பள்ளியில் சேர்த்து
பாடம் படிக்க என்னுடன்
 நடை பயின்று காத 
தூரம் தினமும் போவேமே..

கூட்டாஞ்சோறு சமைத்ததும் 
மண்வீடு கட்டி விளையாடுவதும் மண்ணில் இட்லி வார்த்து சாப்பிட்டதும்.. அருமையான தருணங்கள் அவை..மாலை நேரத்தில் வீடு வர 
நடந்தே வருவோம். அப்போ
தெல்லாம் ஓட்ட பந்தயமும் 
பல நேரம் வக்கீல்
ஏற்றி போகும் மாட்டு 
வண்டியுமே நம் பயணமாகும்..

இப்போதேல்லாம் நடக்கவே மனமில்லை.  இருசக்கரமும் 
மகிழ் ஊர்ந்துமாய் நாட்களை நகர்த்துகிறோம்..

ஒரு தாய் வயிற்று   
பிள்ளையாக வளர்ந்து 
கஞ்சோ கூழோ 
உருண்டை சோறு 
பகிர்ந்து உண்டது உண்டு ..

பாசம் என்ற ஒன்று 
இருந்தால் கல்லான மனதும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? 
இத்தகைய நம் உடன் 
பிறப்புகளாக என்றுமே நாம்..

விட்டு கொடுத்து வளர்ந்து 
உப்பு மூட்டை தூக்கி 
விளையாடிய பாச மலரே 
அக்கா தம்பியாக நாம்..

அடியும் உதையும் குத்து கும்மி 
கோலாட்டம் சண்டை காய் விட்டு பலமணி நேரம் பேசாதிருந்தாலும்..

எதையும் விட்டு கொடுக்காத 
குறும்பு, சண்டையிலும் சமாதானம், பாசத்திலும் சின்ன சின்ன 
கோபம் என அனைத்தும் 
கடந்து அன்போடு பேசுவாய்..

பள்ளியில் பக்கத்தில் அமர்ந்த
பெண் திட்டினாள் என்றால் 
உடனே பரிவுடன். தட்டி கேட்க வருவதுமாக இணைபிரியாது வளர்ந்தோம்.

கடவுளிடம் என்றுமே என்னை விட்டு நீங்காத வரம் ஒன்றை கேட்டதால் தான் என்னவோ எனக்கு தம்பி அளித்திருக்கிறான் போலும்.

பாசம் என்ற ஒன்றை அறியாதவரும் அறிவார் அக்கா, தம்பியுடன் கூட பிறக்கும்போது. அதன் அன்பை பார்ப்பவர்கள் பொறைமையே படுவர்போலும்..

அம்மா வீட்டு வேலை முடிக்க நேரமானாலும் நீ வந்து பள்ளிக்கு போக நேரமாகுதே என்று இரட்டை சடை பின்னி அதை கதவில் தாழ்பாளில் கட்டி விட்டதும்..

எத்தனை முறை உணவுகளை 
விட்டு கொடுத்து தன் தட்டில் இருப்பதை எனக்கு வைத்து ஊட்டியது இன்னும் ஏராளமாக
பல துன்பம் கடந்தோம்.

வறுமையை காலை முதல் மாலை வரை அரசு பள்ளி படிப்பும் மாலை  தோட்ட வேலைக்கு போவதும்
வரும் கூலியால் பேனா 
பென்சில் வாங்கியும் ..

சனி ஞாயிறுகளில் கழுத்து மணிகளை அழகழாய் கோர்த்து விற்று சாப்பிட்டு வளர்ந்தோம்..
கைவேலைப்பாடு பொருள்களும் செய்வோம். அவைகளை சந்தையிலே விற்போம்.

மிதி வண்டி பயின்ற அழகான சுவையான தருணங்களை  நினைத்து நினைத்து
வியக்கிறேன்.

நீயே கற்று தந்தது அப்பா 
ஊருக்கு சென்ற நேரங்களில். 
குரங்கு பெடல் அடிக்கும் போது 
நான் கீழே விழுந்தாலும் நீதாங்கி பிடித்து தினமும் பயிற்சி அளித்து அப்பாவிற்கு முன் மிதிவண்டி ஓட்டி பாராட்டு வாங்கியது பசுமையான நினைவல்லவோ..

நான் பெரியவளாகியதும் வீட்டில் தொட்டு விளையாடக் கூடாது என்று தள்ளி வைத்ததும் பாட்டி  திட்டியதும் நீ அழுது என்னோடு தான் தூங்கனும் என்று அடம்பிடித்து இரவு முழுக்க தேம்பி அழுதே கடந்தது.
மறக்க முடியுமா..

தையல் வகுப்பு செல்லும் போது வயது பையன் கிண்டல் செய்வதையும் நான் சொல்லும் முன்னே முக வாட்டத்தை உணர்ந்து அடுத்த முறை துணைக்கு வருவாயே. தனியே போக தைரியம் சொல்லி தருவாயே..
சட்டை தைத்து தரேன் என்று அளவெடுத்து தலையணை 
உறைப் போல சோளக் 
கொள்ளை பொம்மை போல எதையை தைத்து தருவேன். நீயும் அப்பாவிடம் சொல்லி அழுவாய். 

ஒன்றா இரண்டா குறும்புகள் பெண்ணாக இருந்தாலும் நானும் கோலி கிட்டு புள்ளி விளையாட வருவேன் உன் நண்பர்களோடு. 
நீயும் கோக்கோ நொண்டி 
ஒரு குடம் தண்ணி ஊற்றி 
எல்லா விளையாட்டுமே 
ஒன்றாக விளையாடுவோம்..
  
ஒரு முறை உன் வகுப்பில் 
சுற்றுலா அழைத்து போன
போது நானும் உன்னோடு
 வந்து மகாபல்லிபுரம் 
கோவளம் கோல்டன் பீச் 
பார்த்து கடல் அலையில் 
விழுந்தது நீ அழுதது..பிறகு ஆபத்தின்றி வீடு வந்தோம்..

அப்பா புரோகிதர் என்பதால் 
வேதம் கற்க சொன்ன போது அக்காவுக்கும் கற்றுதாங்க
 என்று பெண்மையை முன் நிறுத்தியது மறக்க முடியுமா..

நானும் நீயுமே குருவிடம்
வேதம் கற்றோம். ஆனால்
வேதம் படித்தாலும் பெண்
வேதம் ஓதவேண்டா மென்ற 
கட்டுபாட்டில் இருந்ததால் நீயும் வேதத்தை துறந்தாய்.  அக்கா எனக்காக...

திருமண வயதில் வரன் 
பார்த்ததும் இந்த மாப்பிள்ளை பிடிக்கல என்று வேண்டாம் 
என்று பொறுப்பாய் தந்தை
போல நடந்து கொள்ளுவதும் அன்பில் உனக்கு நிகர் 
யாருமிலரே..

திருமணம் முடித்து நான்
வந்தாலும் சிறுவயதில் 
இருந்த பாசமும் பரிவும் 
நாம் வளர வளர ஆலம் 
விழுதாக தொடர்கிறதே 
டா தம்பி..

தந்தை மறைந்த துக்கம் 
இருந்தாலும் அவரிடத்தில் நீ 
இருந்து என் மகளுக்கு அனுசரனையாக தாய் 
மாமன் சீரும் சிறப்பாக 
அன்பாய் பகிர்கிறாயே ..

பின் நீ வேலைக்கு சென்று 
எனக்காக ஒவ்வொரு பரிசு பொருளும் ஆசையாய் வாங்கி ஊருக்கு வந்து  தருவதும் 
நெகிழ வைக்குமே..

நீயும் திருமண வயதினை
நெருங்கிய போது உனக்காக
அம்மா இடத்தில் நானும் 
மாமாவும் பெண் பார்த்து 
தேடி அலைந்து  சன்டிவி கல்யாணமாலை வரை 
போனோமே ..
நல்ல வரன் அமைத்தோம்..

உனது வாழ்வில் முதல் 
குழந்தை  தங்க சிலையாக 
எனக்கு மருமகளாக வந்து பிறந்தாள்..

அந்த தங்க மணி ஏதோ 
சுவாச பிரச்சனை என்றதும் 
அவசர பிரிவில் நம்மை அனுமதிக்காமல் நானும் 
நீயும் ஏன் பெற்ற தாயுமே பிள்ளையை பார்க்கவில்லை..

நான் செவிலியரிடம்  கெஞ்சி 
பேசி அந்த சிசுவை பார்க்க 
சென்ற போது குழந்தையை 
நீங்களே அடையாளம் காண சொன்னாரே..

அந்த தருணம் படபடத்தது 
நாம் இருவருக்கும்.. என் 
மருமகளை நானே கண்டு பிடித்தேன்..

அவள் என்னையே உரித்தாற்
போல பிறந்திருந்தாள்.. நான் 
அருகே சென்றதுமே ..
அந்த சிசு விரல் பிடித்து 
உறுதி படுத்தியது..

அவளின் அத்தை நான் 
என்பதை அந்த பரவசம்
இன்னும் அடிவயிற்றில் 
தேனாய் இனிக்கிறது..

இன்னுமின்னும் பாச 
பகிர்வுகளை எழுதி கொண்டே செல்லவோ..எண்ணிக்கை இல்லாமலே..

கை கோர்த்து வளையலை  
பிடித்து சிறுவயது நடை 
பயின்றது முதல்  
இதுவரையும் அப்படியே 
வாழ்கிறாய் ..

ஆண்டாண்டு தோறும் பிறந்த நாளுக்கு அழகிய புடவை பரிசளிப்பாய்.

நான் ஊருக்கு வரும்
போதெல்லாம் வீட்டுக்கு 
போகு முன்னே எனக்கு 
பிடித்த பண்ணீர் சோடா 
லசி பாபுபாஜி அத்தனையும் 
வயிறுமுட்ட சாப்பிட்டு 
வீட்டுக்கு போனால் 
அம்மா ஆசையா 
சமைத்ததை சாப்பிடாம
 திட்டு 
வாங்குவோமே..

அந்த உணவுகளை மாலை
நேரத்தில் உருண்டை சோறாக அப்பாவுடன் சாப்பிட்ட 
சுவைகளை மறக்க 
முடியுமா..

அம்மாவிற்கு கால் வலிக்கிற
தென என் மடிமீது தலை 
சாய்த்து உறங்குவாயே..
என் தலசம் பிள்ளையென வளர்ந்ததும் நீயே

தாயும் நல்ல தோழியாக 
நம்மோடு அறிவுரை 
சொல்லியும் பயணிக்கிறார். 
என்பது வயது 
இயலாமையிலும் 
மகளுக்காக 
ஓடி ஓடி கவனிக்க 
எத்தனிக்கும் பாசத்திற்கு
ஈடு இணையேது 
உலகத்திலே..

உடன்பிறவா 
உன்னத உறவு நீ .
அன்னை தந்தை 
தந்த பரிசு நீ
தோள் கொடுக்கும் 
தோழனாகவும் 
தைரியம்  தந்தவன் நீ.

உடன் பிறப்பென்று பெண்
இரண்டு உண்டு . ஆனால் 
உன் போல் பாச உறவாய் 
அவர்கள் இல்லை.

கள்ளமில்லா அன்பு 
என்றால் 
என்னவென்று நான் 
அறிந்தேன் . 
தம்பி அவன்  அன்பினிலே 
கற்கண்டாய் நான் 
கரைந்தேன் !

அக்கா என நீ அழைக்க 
ஏங்கி மகிழ்ந்திடுவேன்
போடி என்றோ 
சொல்லிவிட்டால் 
கொஞ்சும் கோபத்தில் சினந்திடுவேன்.

தவறுகள் நீ செய்தாலும் 
தண்டனைகள் தரமாட்டேன். , 
தரமான போதனையால் 
உன் தவறினையும் 
திருத்திடுவேன் ... 
வாழ்வில் உயர உயர 
நீ செல்ல 
உளமார வாழ்திடுவேன்., 

நிலவொளியின் நிறம்கூட 
நிமிடத்தில் மாறிடலாம் , 
நிஜமான நின் அன்பு 
நீளும் என்றும் குறையாதே ..

தன்னம்பிக்கை தந்திடுவேன் 
தங்கமான அக்காவாகவே 
உனை ஒப்பிட்டு கவிதை சொல்ல 
இப்பூவுலகில் எவரும் இல்லை , 
என் வரிகளும்  அன்பு 
பாராட்டுமே உன்னை...

மறுஜென்மம் ஒன்றிருந்தால் 
உன் உடன்பிறப்பாய் 
வரவேண்டும் இல்லை 
உந்தன் மடிதவழும் 
மகளாகும் வரம் வேண்டும்..

சிறுவயது முதல் இன்று 
வரை எத்தனை சண்டை
சச்சரவு வந்தாலும் நீ 
என்னை பெயரிட்டோ 
மரியாதைக் குறைவாகவோ பேசியதே இல்லை. 
அக்கா என்றும் 
அழைத்தறியேன்..
எப்போதுமே வாம்மா 
போம்மா என்றும் 
அம்மாவைப் போல 
பாசமாகவே அழைப்பாய்..

என்னை ஈன்ற 
அம்மாவிற்கு நானும் 
வலது கரமாக 
ஆயுள் முழுக்க 
வலம் வருவேனே..

உன்னைப்போல 
ஒருவன் இன்னொரு 
பிறவியில் 
கிடைத்திட வேணுமடா.. 
செல்ல தம்பியே..

Sunday, 12 April 2020

வைத்தியம்

சிக்கன் குனியாவுக்கு - 
நிலவேம்பு 
டெங்கு காய்ச்சலுக்கு - 
பப்பாளி...அந்த வரிசையில்
கொரோனாவிற்கு - 
கபசுர குடிநீர்  
நவீன அறிவியலும்
ஒவ்வொரு முறையும் 
இறுதியில்
தமிழ்நாட்டு மருத்துவத்திடம் தான்
தஞ்சம் கேட்டு நிற்கிறது.

மனிதநோயை 4448 என தரம் பிரித்து அதனை வாதம் ,பித்தம் கபம் என வகைப்படுத்தினர்  நம் முன்னோர்கள்..... 
தீர்க்கப்படாத, தீர்க்கமுடியாத எந்தவொரு நோய்க்கும்  உணவையே மருந்தாக்கி நோய்தீர்க்கும் நம்நாட்டு வழிமுறையைப்போல் வேறு எங்கிலும் காணக்கிடைக்காது.

ஏதோ மருத்துவம் என்றில்லை,
உலகாயதம் எனும் பூதவாதம், சாங்கியம் எனும் எண்ணியம், வைசேடிகம் எனும் சிறப்பியம், யோகம் எனும் தன்னை உணரும் மெய்யறிவியல், வர்மம் எனும் மருத்துவம் சார்ந்த தற்காப்பியல்,அளவியல் எனும் நியாயவியல், விதவிதமான தத்துவார்த்த மெய்யியல் சிந்தனைகள்,ஆசிவகம்.....இன்னும் எத்தனை எத்தனையோ!!!!!!
 
ஏதோ ஆய்வகத்தில்  கிளியையும், எலியையும் வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டதல்ல இந்த மெய்ஞானம்....தன்னையே , தனது உடலையே ஆராய்ச்சி களமாக்கி  சமுகத்திற்கு தவறாக சொல்லிவிடக்கூடாதே எனும் நல்ல நோக்கத்துடன் வருடத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் மூவாயிரம் பாடல்களால் கொடுக்கப்பட்ட நன்னெறி சாத்திரமே திருமந்திரம் .    இன்னும் மனித இனத்திற்கு தேவையான  அனைத்தையும் உள்ளடக்கியதே சித்தர் பாடல்கள்....

தமிழ் சமூகத்தின் மரபென்பது மாபெரும் ஞானமுடையது.....அந்த வழியில் வந்த நாம் இதனைப் பயன்படுத்தாவிடினும் பரவாயில்லை....

Saturday, 16 December 2017

பட்டாம்பூச்சி



பசுமைக் குடிலோடு
வண்ணங்ளை குழைத்து
வார்த்த பட்டு வண்ண 
பூச்சியே
மெட்டு சொல்லியே பாடும்
மனம் நினை காணும் போதெல்லாம் 
புதிய சிறகு முளைத்து 
சிறகடித்தே பறக்கிறது

Monday, 11 December 2017

மருதாணி



மருதாணி பொறுமையின்
பரிசு சிவந்த நிறம்
மருதாணி ஆரோக்கியத்தின்
வெளிப்பாடு
மருதாணி மகிழ்ச்சியின் 
பிம்பம்
மருதாணி பெண்களின் 
மென்மை
மருதாணி சுபநிகழ்ச்சியின் 
பரிசு
மருதாணி குளுமை
இனிமை 
மருதாணி மகிமை 
மகிழ்ச்சியின் பகிர்வு