Saturday, 16 May 2020

உன் திருவிளையாடலை நான் அறியேனே

சந்தேகக்  குறி

பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை பற்றியவையே.   பாகவதம் அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. பகவத் கீதை அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது.  கீதை அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது.

கீதையை  ஏதேனும் அரை அத்தியாயம் ஒரு நாள்  படித்தாலே போதும்,   துயரம்,  துன்பம், தீமைகள்  விலகும்.  ஒரு சின்ன கதையோடு  இன்றைய கட்டுரை முடியட்டும்.

ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும்  கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம்   கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம்.  

வழக்கம் போல் அன்று  கீதையைப்  பாராயணம் பண்ணும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்'' என்ற இடம் வந்தது.   திடீரென்று   இன்று அவனுக்கு ஒரு சந்தேகம்.

இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள்.  அவ்வளவு பேரையும்  கிருஷ்ணன் எப்படி நான்  ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே  ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து  நேரில்  சென்று போக்குவது என்பது முடிகிற காரியமா? 

எல்லோரின் கஷ்டத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்?. அவர்களை  சோகத்திலிருந்து, துன்பத்திலிருந்து எவ்விதம்  விடுவிப்பான்?  உலகில் எங்கும் அங்கங்கே அவன் நியமிக்கும் வேறு யார் மூலமாகவோ ஒரு வேளை நிவர்த்திப்பானோ? நான் பாதுகாக்கிறேன் என்றால் அது தான் அர்த்தமா?  

திரும்பி திரும்பி படித்தும்  அவனுக்கு  இது  விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று புரிந்து கொள்ளவேண்டும்  என்று தீர்மானித்து  சிகப்பு வர்ணத்தில் ஒரு   x  அந்த  அந்த அத்தியாயத்தில் ஸ்லோகத்தின் மேல் குறி வைத்தான். புத்தகத்தை மூடினான்.  சொம்பை ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல  உஞ்ச விருத்திக்கு சென்றுவிட்டான்.

அந்த ஏழை பிராமணனின் போறாத காலமோ, துரதிர்ஷ்டமோ   அன்றைக்கு பார்த்து ஒருவீட்டிலும் யாரும்  அவனுக்கு தானியங்கள் பிக்ஷை  அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணம் ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

பிராமணன் வழக்கமான தெருக்களில் அலைந்துகொண்டிருந்த சமயம் யாரோ ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத்  தட்டினான்.  பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது. அழகான  அந்த சிறுவன்  தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வீட்டில் வைத்தான்.

யார் அப்பா நீ ? என்ன இதெல்லாம்?  அட்ரஸ் தப்பா  இங்கே வந்து விட்டாய் போல இருக்கிறது?

''இல்லேம்மா, நான் இங்கே  இருக்கிறவன்  தான். இது என் குருநாதர் வீடு.  அவர் எனக்கு கட்டளை இட்டதால் அவருக்கு  தேவைப்பட்ட  சாமான்கள் இதெல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.''

மூட்டை நிறைய , பருப்பு, மாவுகள், அரிசி, சமையல் சாமான்கள், எண்ணெய்கள், நெய்  எல்லாமே இருந்தது.  தாராளமாக  மூன்று மாதத்திற்கு அவர்கள்  ரெண்டு பேருக்கு சமையலுக்கு தேவையானவை.

''நான் இங்கே உன்னை பார்த்ததில்லையே அப்பா.  எங்களுக்கு இதெல்லாம் வேண்டாமப்பா. அவருக்கு தெரியாமல் இதை நான் ஏற்க மாட்டேன். என்னை கோபிப்பார்''

அம்மா ஒருவேளை உங்களுக்கு   நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது.  குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் நான் மூட்டையை சுமந்து  மெதுவாக நகர்கிறேன் என்று  என் மேல் இடது பக்கமும் வலது பக்கமும்  பலமாக  முதுகில் அடித்திருக்கிறார். 

என் முதுகில் பாருங்கள் தெரியும்.  குரு பத்னி அவன் அழகிய முதுகில் பார்த்தாள் .   X  என்று  சிவப்பாக  அவள் கணவன்   அடித்ததின்   அடையாளம்.   அவள் திகைத்தாள்.  ஏன்  என் கணவர் இவ்வாறு இந்த சிறுவனிடம்  அவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார். இப்படிப்பட்டவரா என் கணவர்?  பார்ப்பதற்கு சாது மாதிரி இருக்கிறாரே!  .  

''என் குழந்தை நீ இங்கே வாடா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து  முதுகைத் தடவி, தேங்காய் எண்ணெய் தடவி, அவனுக்கு  உணவளித்தாள்.   அவர் வரும் வரை ஓய்வெடு என்றதும் அவன் பூஜை அறையில் போய்  படுப்பதாக  சொல்லி உள்ளே சென்றான்.

ரொம்ப நேரம் கழித்து களைப்பாக  எங்கும்  அன்று உணவு பதார்த்தங்கள், தானியங்கள் பிக்ஷை எதுவும் கிடைக்காமல் பிராமணர்  விசனத்தோடும் வெறும் கையோடும்  வீடு திரும்பினார்.  

அவர்  தலையைக் கண்டவுடன் முதல் கேள்வியாக அவரை  எதுவும் பேச விடாமல்  சரமாரியாக  அவள்  அந்த அழகிய சிறுவன்,  சிஷ்யனா,  அவர் எப்போது அவனிடம்   சாமான்கள் கேட்டு கொண்டு வர சொன்னார் . அவன்  சாமான்களை தூக்க முடியாமல்  தூக்கி வந்தது. அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் பிரம்பால்  குறுக்கும் நெடுக்குமாக   அவர்  அடித்த சிவந்த அடையாளம்  எல்லாம் சொல்லி ஏன் அவனை அடித்தீர்கள் என்று காரணம் கேட்டாள் .

பிராமணருக்கு தலை சுற்றியது.

''எனக்கு சிஷ்யனா?  நான் சாமான் கேட்டேனா?  அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் அடித்தேனா?  என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது எதுவுமே நடக்கவில்லையே. எனக்கு யாரும் சிஷ்யனே கிடையாதே. நான் சாமான் கேட்கவில்லையே, அடிக்கவில்லையே''.

''நீங்கள் அடித்தீர்கள் என்று முதுகை காட்டினானே   X  என்று சிவப்பாக அடையாளம் இருந்ததே. சின்ன குழந்தை அவன் பொய் சொல்லவில்லை. நான் முதுகில் தேங்காய் எண்ணெய் தடவினேன். என்  கண்களில் நீர் பெருகியதே. ''

 ''இல்லை என்  கிருஷ்ணன்  சாட்சியாக எனக்கு அவனைத் தெரியவே தெரியாது, நான் அடிக்கவில்லை'' என்கிறார்.

''இதோ பூஜை அறையில் தான் இருக்கிறான் போய் பாருங்கள் '.  ஓடினார்.  வீடு முழுதும் தேடினார்.  அவனைக் காணோம்.

பிராமணருக்கு   புரிந்துவிட்டது. வந்தது  கிருஷ்ணன் தான்.  வீட்டில் நிறைய  சாமான்கள் வசதியாக நிறைந்திருந்ததே. அவர் வறுமை நீங்கியதே.  இது கிருஷ்ணன் லீலை. அவன் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து  மறுபடியும்  பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார்.  காலையில்  அவர் சந்தேகத்தோடு  போட்ட X  குறியைக் காணோம். யார் அழித்தது?  

''கிருஷ்ணா,   கோடானு கோடி மக்களின் துயர், சோகம் தீர நான் அருகிலே  இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று சந்தேகப்பட்டேனே.  என் வறுமைத் துயர் தீர்க்க நீ என் வீட்டிற்குள்  வந்தாய், வறுமையை போக்க  உணவளிக்க  மளிகை சாமான்களை நிரப்பினாய். உன் காருண்யம் புரிந்தது. உன்னால் முடியும் என்று புரிய   வைத்தாய். 

அதற்கு  அடையாளமாக நான் போட்ட சந்தேக குறியை முதுகில் தாங்கி  என் மனைவிக்கு தரிசனம் தந்தாய். அவள் செய்த  புண்யம், அதிர்ஷ்டம் கூட  செய்யாத பாவி நான் உன்னை சந்தேகப்பட்டேன்''.  

ஆம்  கீதையும் கண்ணனும் ஒன்றே.  கீதையை இது எப்படி என்று சந்தேகக்கப்பட்டு  அழுத்தி X  கோடு போட்டேன்,  கீதை நீ என்று அறியாத மூடன், அதை உன் மேல் சந்தேகப்பட்டதாக காட்டி முதுகில் வடுவோடு , காயத்தோடு என் மனைவிக்கு காட்டி எனக்கு கண் திறந்தாய். கிருஷ்ணா  என்னை மன்னித்துவிடு''.

எவன் அவனவனுக்கு நியமிக்கப்பட்ட தர்மங்களை, சாஸ்திரங்களை பின்பற்றாமல்  மிருக வாழ்க்கை நடத்துகிறானோ, அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்காது. 

இன்று முழுதும் உஞ்சவிருத்தியில் ஒரு மணி அரிசி கூட எனக்கு  கிடைக்கவில்லையே. இது நிதர்சனமான உண்மை இல்லையா?

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்  !

Friday, 15 May 2020

சாக்குபை லிங்கம்

#சாக்குப்பைக்குள்_சங்கரன்

#வியாபாரி ஒருவர், தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை, தன் மைத்துனருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். 
பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த மைத்துனர், ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். 

#தன்_மாமா, சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த மைத்துனர், ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி, சிவலிங்கம் போல் வடிவமைத்து, காட்டுப்பூக்களால் அலங்கரித்து, ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். 
பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது.

#வியாபாரி எழுந்ததும், ''மாமா! நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம்... பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள்,'' என்றார். 'எங்கும் சிவமயம்' என்று மகிழ்ந்த வியாபாரியும், தன் மைத்துனர் காட்டிய இடத்திற்கு சென்றார். சிவலிங்கத்தை தரிசித்தார். பின் சாப்பிட்டார். 

அப்போது தான் மைத்துனர், ''மாமா! சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக, ஒரு சாக்குப்பையில் மண்நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும்,'' என்றார்.

''என்ன சொல்கிறீர்கள் மைத்துனரே! நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன்” என்றார் உறுதியாக. 

“நம்ப மாட்டீர்களா... சாக்குப்பையை மண்ணில் நட்டு வைத்தது நான் தான்,” 

என்ற மைத்துனர், அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அது அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட மைத்துனர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. 

இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகிலுள்ள கூழைய கவுண்டன் புதூரில் ஆகும். இங்கு மொக்கணீஸ்வரர் கோவில் உள்ளது. மொக்கணி என்றால் 'சாக்குப்பை'. மாணிக்கவாசகர், இந்த லிங்கத்தின் பெருமையை, 'மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி' என்று போற்றுகிறார்.

என்னில் நீ தவழவும் என்மடியில் இளைபாரவும் உன் சந்ததி என் பிள்ளைகளாகவும் பாவிக்கிறேன் நீ மட்டும் எனக்கு வாழ இடமில்லாமல் என் உயிரை மாய்க்கிறாயே... மன்னோடு புதைக்கிறேயே எனக்கு உயிர் தண்ணீர் கூட தரமனமில்லா மனிதா உனக்கு வாழ நீர் வேண்டுமோ... என கண்ணீரோடு இப்படிக்கு மரம்

Thursday, 14 May 2020

ஆ.உராய்வுக் கல்

"ஆ உராய்வுக்கல்"

ஆவுரைச்சிக்கல்
ஆவுரஞ்சிக்கல்
ஆதீண்டுகுற்றி எனப் பல பெயர்களில், சங்ககாலம் முதல் பகுதிக்கேற்றுவாறு அழைக்கப்படுகிறது.

"ஆ" - எனும் செல், இலக்கியங்களில் பசுக்களை பொதுவாக கால்நடைகளைக் குறிக்கிறது. இவ்வாறு மாடு உராய்வும்கல்லே, ஆ ஓஞ்சிக்கல்லு, ஆ உறிஞ்சிக்கல்லு என அழைக்கப்படுகிறது.

உருளைவடிவிலான நீண்ட கற்கள், உயரமான கல்தூண், மரக்கட்டைகளை, கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சல் முடிந்து திரும்பிவரும் பாதைகளில், நீர் அருந்தும் குளங்களில், தெருவோரங்களில் அமைக்கப்படும் நீா்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். மாடுகள் தண்ணீர் குடித்த பிறகு, அதன் உடலில் ஏற்படும் தினவை (அரிப்பை) தவிர்க்க ஆவுரைச்சிக்கல்லில் தமது உடம்பைத் தேய்த்துக்கொள்ளும்.

இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சங்ககாலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்.

இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன.

Tuesday, 12 May 2020

திருச்செந்துர் கொடிமரம்

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?

அப்படியென்றால் நீங்கள் அவசியம் 
திருசெந்தூர் ஆலயத்தில்  தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
 மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின்  கொடிமரத்துக்குத்தான் 
பூஜை நடைபெறும் .

இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற 
சந்தன மரமாகும்

இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.

இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?

திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. 

காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். 

உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். 

திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். 

அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். 

அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். 

அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். 

அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. 

இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 

இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். 

அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். 

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். 

அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். 

"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. 

எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். 

ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. 

விதி யாரை விட்டது. 

அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு 
மலைக்கு சென்றார்.

அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். 

அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. 

ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.

அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. 

எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். 

அங்கு அற்புதமான நல்ல 
உயரமான சந்தனமரம் 
ஒன்று இருந்தது.

''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி. 

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். 

அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். 

முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்.

மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். 

கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. 

உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. 

அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். 

இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். 

அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. 

உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். 

அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். 

சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். 

‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். 

அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.

சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் 
அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி  அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடந்து 
வாசம் செய்து கொள்ளும்படியும்  உத்தரவிட்டார்.

அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். 

பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். 

அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. 

சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.

இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். 

மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவலை "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? 

திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. 

அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது. 

ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி  
21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்.

ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. 

எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது. 

சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..

தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும்  நமஸ்காரம் செய்வார்கள். 

இதற்கான அனுமதி இலவசம். 

அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!

இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!