Tuesday 14 April 2020

உறவுகள் என்பார்வையில் "அக்கா தம்பி"

#tccontest2020
நானும் தம்பியும் 
கவிதை தலைப்பு 
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

"நீயின்றி நான் வளர்ந்தேனோ நிலவுக்கு பின் விடியலாக
நம் உறவு" ..

நம் கூட பிறந்த உறவுகள் 
என்றுமே இறைவன் நமக்கு துணையாக அனுப்பியிருக்கும் வரமே தவிர பாரங்கள் அல்ல.
அதற்கான சான்றாக 
நானும் என்  தம்பியும்..

நீ மண்ணில் வந்து 
விழுந்த போதே நான் கன்னிதாயாகிப் போனேன்.
என்பதை உணரவில்லை.
ஆனாலும்.. 

பிறந்த குழந்தையை 
கையில் வாங்க அடம் 
பிடித்து வாங்கிய நான் ..

குண்டு கண்கள் நீண்ட 
விரல்கள் செக்க 
செவேரென நிறம் சுருள்
சுருளாக நீண்ட கருகருவென
 முடிகள் என்னைப்போலவே 
என்று செவிலியர் 
சொன்னதும் ..
புல்லரித்து போனேன்..

 அம்மாவிற்கு உதவியாக 
பல வேலைகள் செய்த 
போது உணர்ந்தேன்..
நானும் ஒரு கன்னிதாய்ப் 
போலவே!!

உன் அசைவும் அழுகையும் உறக்கத்தில் புன்முறுவலும் 
என்னில் எண்ணிலடங்கா
ஏகாந்தம் பிறக்கும்.

மெல்ல மெல்ல நாளொரு பொழுதுமாய் வளர
துவங்கினாய்.. விரல் பிடித்து 
மடி தவழ்ந்து வளர்ந்தது 
நம் சகோதர பாசமும்..

ஏட்டில் அடங்கிடுமோ
இக்கவிதை வானத்து நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டே வளர்பிறையாக வளரத்துவங்கியது
நம் பாசமும்..

உன்னை தூக்க 
முடியாமல் தூக்கி 
கீழ போட்டதும் 
அம்மாவிடம் திட்டு 
வாங்கியதும் உரம் 
விழுந்து அம்புஜம் 
பாட்டி நெல்லெண்ணைய் 
தடவி உரம் எடுத்து 
மசூதிக்கு சென்று
இனி உரம் விழாம
இருக்க கயிறு போட்ட 
பிறகு நானே தூளியில் 
ஆட்டி உறங்க வைத்ததும் 
அந்த களிப்பிலே நானும் உறங்கிடுவேன்..

நடைவண்டி பயிற்சி 
தரும் ஆசானாக 
கை பிடித்து 
கற்பலகையில் அனா 
ஆவன்னா பழகியது 
நானாகவே
கற்று தருவேன். என் வீட்டு பாடங்களையும் கணக்கு
பெருக்கல் வாய்பாடும் 
உன்னிடமே ஒப்பித்து
 காட்டுவேன்.. 

நான் வளர எனக்கு 
தாத்தா பாட்டியோ மாமன் அத்தையோ ஏன் அப்பா 
அம்மாகூட ஒரு மரபாச்சி பொம்மையும் வாங்கி 
தந்ததல்ல. 

நானும் கருத்தறிந்து 
கேட்டதல்ல..
நீயே எனக்கு 
பொம்மையாகி 
போனாய் பல 
நேரத்தில் மாலை 
நேரவிளையாட்டு 
தருணங்களில் ..

நாட்கள் கடந்து 
வருடங்களாகி பின் 
நீயும் பள்ளியில் சேர்த்து
பாடம் படிக்க என்னுடன்
 நடை பயின்று காத 
தூரம் தினமும் போவேமே..

கூட்டாஞ்சோறு சமைத்ததும் 
மண்வீடு கட்டி விளையாடுவதும் மண்ணில் இட்லி வார்த்து சாப்பிட்டதும்.. அருமையான தருணங்கள் அவை..மாலை நேரத்தில் வீடு வர 
நடந்தே வருவோம். அப்போ
தெல்லாம் ஓட்ட பந்தயமும் 
பல நேரம் வக்கீல்
ஏற்றி போகும் மாட்டு 
வண்டியுமே நம் பயணமாகும்..

இப்போதேல்லாம் நடக்கவே மனமில்லை.  இருசக்கரமும் 
மகிழ் ஊர்ந்துமாய் நாட்களை நகர்த்துகிறோம்..

ஒரு தாய் வயிற்று   
பிள்ளையாக வளர்ந்து 
கஞ்சோ கூழோ 
உருண்டை சோறு 
பகிர்ந்து உண்டது உண்டு ..

பாசம் என்ற ஒன்று 
இருந்தால் கல்லான மனதும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? 
இத்தகைய நம் உடன் 
பிறப்புகளாக என்றுமே நாம்..

விட்டு கொடுத்து வளர்ந்து 
உப்பு மூட்டை தூக்கி 
விளையாடிய பாச மலரே 
அக்கா தம்பியாக நாம்..

அடியும் உதையும் குத்து கும்மி 
கோலாட்டம் சண்டை காய் விட்டு பலமணி நேரம் பேசாதிருந்தாலும்..

எதையும் விட்டு கொடுக்காத 
குறும்பு, சண்டையிலும் சமாதானம், பாசத்திலும் சின்ன சின்ன 
கோபம் என அனைத்தும் 
கடந்து அன்போடு பேசுவாய்..

பள்ளியில் பக்கத்தில் அமர்ந்த
பெண் திட்டினாள் என்றால் 
உடனே பரிவுடன். தட்டி கேட்க வருவதுமாக இணைபிரியாது வளர்ந்தோம்.

கடவுளிடம் என்றுமே என்னை விட்டு நீங்காத வரம் ஒன்றை கேட்டதால் தான் என்னவோ எனக்கு தம்பி அளித்திருக்கிறான் போலும்.

பாசம் என்ற ஒன்றை அறியாதவரும் அறிவார் அக்கா, தம்பியுடன் கூட பிறக்கும்போது. அதன் அன்பை பார்ப்பவர்கள் பொறைமையே படுவர்போலும்..

அம்மா வீட்டு வேலை முடிக்க நேரமானாலும் நீ வந்து பள்ளிக்கு போக நேரமாகுதே என்று இரட்டை சடை பின்னி அதை கதவில் தாழ்பாளில் கட்டி விட்டதும்..

எத்தனை முறை உணவுகளை 
விட்டு கொடுத்து தன் தட்டில் இருப்பதை எனக்கு வைத்து ஊட்டியது இன்னும் ஏராளமாக
பல துன்பம் கடந்தோம்.

வறுமையை காலை முதல் மாலை வரை அரசு பள்ளி படிப்பும் மாலை  தோட்ட வேலைக்கு போவதும்
வரும் கூலியால் பேனா 
பென்சில் வாங்கியும் ..

சனி ஞாயிறுகளில் கழுத்து மணிகளை அழகழாய் கோர்த்து விற்று சாப்பிட்டு வளர்ந்தோம்..
கைவேலைப்பாடு பொருள்களும் செய்வோம். அவைகளை சந்தையிலே விற்போம்.

மிதி வண்டி பயின்ற அழகான சுவையான தருணங்களை  நினைத்து நினைத்து
வியக்கிறேன்.

நீயே கற்று தந்தது அப்பா 
ஊருக்கு சென்ற நேரங்களில். 
குரங்கு பெடல் அடிக்கும் போது 
நான் கீழே விழுந்தாலும் நீதாங்கி பிடித்து தினமும் பயிற்சி அளித்து அப்பாவிற்கு முன் மிதிவண்டி ஓட்டி பாராட்டு வாங்கியது பசுமையான நினைவல்லவோ..

நான் பெரியவளாகியதும் வீட்டில் தொட்டு விளையாடக் கூடாது என்று தள்ளி வைத்ததும் பாட்டி  திட்டியதும் நீ அழுது என்னோடு தான் தூங்கனும் என்று அடம்பிடித்து இரவு முழுக்க தேம்பி அழுதே கடந்தது.
மறக்க முடியுமா..

தையல் வகுப்பு செல்லும் போது வயது பையன் கிண்டல் செய்வதையும் நான் சொல்லும் முன்னே முக வாட்டத்தை உணர்ந்து அடுத்த முறை துணைக்கு வருவாயே. தனியே போக தைரியம் சொல்லி தருவாயே..
சட்டை தைத்து தரேன் என்று அளவெடுத்து தலையணை 
உறைப் போல சோளக் 
கொள்ளை பொம்மை போல எதையை தைத்து தருவேன். நீயும் அப்பாவிடம் சொல்லி அழுவாய். 

ஒன்றா இரண்டா குறும்புகள் பெண்ணாக இருந்தாலும் நானும் கோலி கிட்டு புள்ளி விளையாட வருவேன் உன் நண்பர்களோடு. 
நீயும் கோக்கோ நொண்டி 
ஒரு குடம் தண்ணி ஊற்றி 
எல்லா விளையாட்டுமே 
ஒன்றாக விளையாடுவோம்..
  
ஒரு முறை உன் வகுப்பில் 
சுற்றுலா அழைத்து போன
போது நானும் உன்னோடு
 வந்து மகாபல்லிபுரம் 
கோவளம் கோல்டன் பீச் 
பார்த்து கடல் அலையில் 
விழுந்தது நீ அழுதது..பிறகு ஆபத்தின்றி வீடு வந்தோம்..

அப்பா புரோகிதர் என்பதால் 
வேதம் கற்க சொன்ன போது அக்காவுக்கும் கற்றுதாங்க
 என்று பெண்மையை முன் நிறுத்தியது மறக்க முடியுமா..

நானும் நீயுமே குருவிடம்
வேதம் கற்றோம். ஆனால்
வேதம் படித்தாலும் பெண்
வேதம் ஓதவேண்டா மென்ற 
கட்டுபாட்டில் இருந்ததால் நீயும் வேதத்தை துறந்தாய்.  அக்கா எனக்காக...

திருமண வயதில் வரன் 
பார்த்ததும் இந்த மாப்பிள்ளை பிடிக்கல என்று வேண்டாம் 
என்று பொறுப்பாய் தந்தை
போல நடந்து கொள்ளுவதும் அன்பில் உனக்கு நிகர் 
யாருமிலரே..

திருமணம் முடித்து நான்
வந்தாலும் சிறுவயதில் 
இருந்த பாசமும் பரிவும் 
நாம் வளர வளர ஆலம் 
விழுதாக தொடர்கிறதே 
டா தம்பி..

தந்தை மறைந்த துக்கம் 
இருந்தாலும் அவரிடத்தில் நீ 
இருந்து என் மகளுக்கு அனுசரனையாக தாய் 
மாமன் சீரும் சிறப்பாக 
அன்பாய் பகிர்கிறாயே ..

பின் நீ வேலைக்கு சென்று 
எனக்காக ஒவ்வொரு பரிசு பொருளும் ஆசையாய் வாங்கி ஊருக்கு வந்து  தருவதும் 
நெகிழ வைக்குமே..

நீயும் திருமண வயதினை
நெருங்கிய போது உனக்காக
அம்மா இடத்தில் நானும் 
மாமாவும் பெண் பார்த்து 
தேடி அலைந்து  சன்டிவி கல்யாணமாலை வரை 
போனோமே ..
நல்ல வரன் அமைத்தோம்..

உனது வாழ்வில் முதல் 
குழந்தை  தங்க சிலையாக 
எனக்கு மருமகளாக வந்து பிறந்தாள்..

அந்த தங்க மணி ஏதோ 
சுவாச பிரச்சனை என்றதும் 
அவசர பிரிவில் நம்மை அனுமதிக்காமல் நானும் 
நீயும் ஏன் பெற்ற தாயுமே பிள்ளையை பார்க்கவில்லை..

நான் செவிலியரிடம்  கெஞ்சி 
பேசி அந்த சிசுவை பார்க்க 
சென்ற போது குழந்தையை 
நீங்களே அடையாளம் காண சொன்னாரே..

அந்த தருணம் படபடத்தது 
நாம் இருவருக்கும்.. என் 
மருமகளை நானே கண்டு பிடித்தேன்..

அவள் என்னையே உரித்தாற்
போல பிறந்திருந்தாள்.. நான் 
அருகே சென்றதுமே ..
அந்த சிசு விரல் பிடித்து 
உறுதி படுத்தியது..

அவளின் அத்தை நான் 
என்பதை அந்த பரவசம்
இன்னும் அடிவயிற்றில் 
தேனாய் இனிக்கிறது..

இன்னுமின்னும் பாச 
பகிர்வுகளை எழுதி கொண்டே செல்லவோ..எண்ணிக்கை இல்லாமலே..

கை கோர்த்து வளையலை  
பிடித்து சிறுவயது நடை 
பயின்றது முதல்  
இதுவரையும் அப்படியே 
வாழ்கிறாய் ..

ஆண்டாண்டு தோறும் பிறந்த நாளுக்கு அழகிய புடவை பரிசளிப்பாய்.

நான் ஊருக்கு வரும்
போதெல்லாம் வீட்டுக்கு 
போகு முன்னே எனக்கு 
பிடித்த பண்ணீர் சோடா 
லசி பாபுபாஜி அத்தனையும் 
வயிறுமுட்ட சாப்பிட்டு 
வீட்டுக்கு போனால் 
அம்மா ஆசையா 
சமைத்ததை சாப்பிடாம
 திட்டு 
வாங்குவோமே..

அந்த உணவுகளை மாலை
நேரத்தில் உருண்டை சோறாக அப்பாவுடன் சாப்பிட்ட 
சுவைகளை மறக்க 
முடியுமா..

அம்மாவிற்கு கால் வலிக்கிற
தென என் மடிமீது தலை 
சாய்த்து உறங்குவாயே..
என் தலசம் பிள்ளையென வளர்ந்ததும் நீயே

தாயும் நல்ல தோழியாக 
நம்மோடு அறிவுரை 
சொல்லியும் பயணிக்கிறார். 
என்பது வயது 
இயலாமையிலும் 
மகளுக்காக 
ஓடி ஓடி கவனிக்க 
எத்தனிக்கும் பாசத்திற்கு
ஈடு இணையேது 
உலகத்திலே..

உடன்பிறவா 
உன்னத உறவு நீ .
அன்னை தந்தை 
தந்த பரிசு நீ
தோள் கொடுக்கும் 
தோழனாகவும் 
தைரியம்  தந்தவன் நீ.

உடன் பிறப்பென்று பெண்
இரண்டு உண்டு . ஆனால் 
உன் போல் பாச உறவாய் 
அவர்கள் இல்லை.

கள்ளமில்லா அன்பு 
என்றால் 
என்னவென்று நான் 
அறிந்தேன் . 
தம்பி அவன்  அன்பினிலே 
கற்கண்டாய் நான் 
கரைந்தேன் !

அக்கா என நீ அழைக்க 
ஏங்கி மகிழ்ந்திடுவேன்
போடி என்றோ 
சொல்லிவிட்டால் 
கொஞ்சும் கோபத்தில் சினந்திடுவேன்.

தவறுகள் நீ செய்தாலும் 
தண்டனைகள் தரமாட்டேன். , 
தரமான போதனையால் 
உன் தவறினையும் 
திருத்திடுவேன் ... 
வாழ்வில் உயர உயர 
நீ செல்ல 
உளமார வாழ்திடுவேன்., 

நிலவொளியின் நிறம்கூட 
நிமிடத்தில் மாறிடலாம் , 
நிஜமான நின் அன்பு 
நீளும் என்றும் குறையாதே ..

தன்னம்பிக்கை தந்திடுவேன் 
தங்கமான அக்காவாகவே 
உனை ஒப்பிட்டு கவிதை சொல்ல 
இப்பூவுலகில் எவரும் இல்லை , 
என் வரிகளும்  அன்பு 
பாராட்டுமே உன்னை...

மறுஜென்மம் ஒன்றிருந்தால் 
உன் உடன்பிறப்பாய் 
வரவேண்டும் இல்லை 
உந்தன் மடிதவழும் 
மகளாகும் வரம் வேண்டும்..

சிறுவயது முதல் இன்று 
வரை எத்தனை சண்டை
சச்சரவு வந்தாலும் நீ 
என்னை பெயரிட்டோ 
மரியாதைக் குறைவாகவோ பேசியதே இல்லை. 
அக்கா என்றும் 
அழைத்தறியேன்..
எப்போதுமே வாம்மா 
போம்மா என்றும் 
அம்மாவைப் போல 
பாசமாகவே அழைப்பாய்..

என்னை ஈன்ற 
அம்மாவிற்கு நானும் 
வலது கரமாக 
ஆயுள் முழுக்க 
வலம் வருவேனே..

உன்னைப்போல 
ஒருவன் இன்னொரு 
பிறவியில் 
கிடைத்திட வேணுமடா.. 
செல்ல தம்பியே..

2 comments:

  1. இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார் தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

      Delete